கொரோனாவுக்கான "2டிஜி" மருந்து..! எப்போது சந்தைக்கு வரும்? உயர்நீதிமன்றம் கேள்வி
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொரோனா சிகிச்சைக்காக கண்டுபிடித்த 2 டிஜி மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொரோனா சிகிச்சைக்காக 2 டிஜி என்ற மருந்தைக் கண்டுபிடித்தது. அதனை உடனடியாக சந்தைக்குக் கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் 2 டிஜி மருந்தை உற்பத்தி செய்ய ஒரு ஆய்வகத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2 டிஜி மருந்தை உற்பத்தி செய்ய 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அழைத்து பேசி, அங்கீகாரம் அளித்திருக்க வேண்டாமா ? எனக் கேள்வி எழுப்பினர். சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக ஆந்திர மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக விளக்கமளித்தார்.
இதையடுத்து 2 டி ஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
Comments